Monday 30 April 2012

மே 1



பெரும்பானமையெனும்
பேரிரைச்சலில்
வெள்ளப்பெருக்கின் வீரியமாய்
அடித்துச் செல்லும் 
சிறுபான்மையின் பெருகுரல்
ஒரு விடியலுக்கான காத்திருப்பில்
அன்றாடம் வேர்வையாய் சிந்தும்
உதிரத்துளிகள் கணக்கெடுப்பில் வருவதில்லை
நிர்ணயித்த கொடைக்கூலியால்

விலைவாசி அரக்கனின்
கொடூரப்பசியில் குரல்வலை சிக்கி
நசித்துக் கொண்டிருக்கும்
எங்களுக்கு கொண்டாட்டமாய்
பேரில் மட்டுமே புழங்குகிறது
இந்த மே பெரு தினம்

ஒரு விடியலுக்கு 
காத்திருப்பு
முடிவுக்கென சில
பிணக்காய் பல
ஆரம்பத்திற்கு
அகம் மகிழ
பொய்கள் 
புறவாழ்வு வெறுத்து
மரணம் வாங்கி
மனமகிழ்தல் 
வினாக்களோடு வீதி வலம் 
புறக்கணப்பு
தெளிதல்
இழத்தல்
உணர்தல்
ஊழியம்
போதும் இந்த பெருவாழ்வென

ஒய்வெடுக்கும் போது
விஸ்வரூபம் எடுக்கும்
முதுமை என்னும் இயலாமை
முடியும் வரை நிமிரவே நேரமின்றி
முடிந்து போகிறது எங்கள் பிறவி

இருந்தும் தன்னம்பிக்கை
தளர்வதில்லை எங்களுக்கு
வறுமை கோட்டை சற்று தளர்த்தி தான்
ஓய்கிறோம் எங்கள் சந்ததிகளுக்கு
கல்வியென்னும் களஞ்சியத்தை காட்டி...

Tuesday 24 April 2012

மானிட பிரம்மன்



இதோ
பிரம்மன் தனக்காக
என்னை
சிருஷ்டிக்கிறான்
பார்வை
காதல்
கணிவு
பாசம்
ஆசை
காமம்
உரிமை
அக்கறை
கருணை
தாய்மை
கோபம் 
இறைமை 
பத்து பத்து விழுக்காடு இட்டு
நூறுக்கு மேற்பட்ட விழுக்காட்டோடு
அதீததமாய் அங்கரீக்கப்பட்டேன்
அந்த மானிட பிரம்மனுக்கு
பொருத்தமான தேவதையாய் நான்!!!.

Monday 23 April 2012

நிலா நிலா ஓடிவா!!

கலையும் மேகக்குவியலில்
ஒளிந்தும் ஓடியும்
விளையாடி கொண்டிருக்கிறாய் நீ

நட்சத்திரங்களை எண்ணி
தோற்றுக் கொண்டு இருக்கிறது
கனவுகள் பொய்யான 
பல ஜோடி கண்கள்

உன்னை எழுதி
கொண்டாடிக் கொண்டிருக்கிறது
கவி உலகம்

உன் ஒளி தாங்கி
மடி விரித்து பூமி.
.
உன்னை பிடித்து தருவதாய்
இன்னும் பொய் சொல்லி
சோறுட்டும் ஓரிரு அம்மாக்கள்

அதோ உன் அழகுக்கு
அவளை ஒப்பிட்டுக் கொண்டு மேலும் ஒருவன்

உன்னை விரட்டி
விடியத் துடிக்கும் சூரியன்

வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
வருந்தாத ”நிலவே”

இன்று என் ஜன்னலில்
எட்டிப்பார்க்க வருவாயா?

எங்கள் 
முதல் முத்தத்துக்கு சாட்சியாய்!!!