Saturday 28 July 2012

பேராசை!!



ஆசைகளை களைய
அனைத்தும் வியப்பாய் இருந்தது
எந்த தேவனிடம் பிரார்த்திக்க
இனி என்னை எந்த பேராசையும் கவ்வக்கூடாதென்று
மனசை கொஞ்சம் கீறி
ரணமாக்கிக்கொண்டேன் வலிக்கிறது
காயத்துக்கு மருந்திடும் எண்ணமில்லை
சற்றே வலிக்கட்டும் இப்போதைக்கு
அதற்குள் ஆசைகளை துறக்கவும் பயின்றுக்கொள்கிறேன்
எனக்கானவை என்பதன் மென் பொருள்
மெல்ல புரிய களைகிறது என் கூரையின் மேல் வானம்
நிர்மூலமாய் வெகு நிர்மூலமாய்
ம்ம்ம்ம்
இனி இதில் சுகம் தேட பழகிக்கொள்ளவேண்டும் என
எண்ணி முடிக்கையில்
ஒரு நாள் தோழி சொன்னது நினைவில் வந்தது
உன்னில் தேடு அன்பை என்று..
எனக்குள் சிரித்துக்கொள்கிறேன் எனக்கும் கேட்கிறது என் சிரிப்பு இப்போது
ஒரு முறை வந்து போனது எனக்குள் சட்டமிடப்பட்ட உன் முகம்!!!

செந்நிற கணங்கள்


செந்நிற கணங்கள்
இருப்புக்கொள்ளாமல் நீ என் இருப்பில்
கொடுத்த அன்பையெல்லாம்
தவணை முறையில் ஈட்டிக்கொண்டு
இருக்கிறாய் தகிப்பு முறை கையாண்டு
இரவுகள் எடுக்கும் முடிவையெல்லாம்
கலைத்து போட்டு குளிர்க்காய்கிறது
அன்றாட விடியல்கள்
உன் கொடுங்கோலாட்சியில் ஏன் நான் மட்டும்
அடிமையாய்!!
நீ என் மன்னன் அல்லாத போதும்!!
இதோ நானும் தீயில் உருகி
என் மாமிசம் சதையாய் ஒழுகிக்கொண்டிருக்கிறது
குருதி மட்டும் தீயில் உறிஞ்சப்பட்டு
எலும்புகள் மட்டுமே மிஞ்ச
எடுத்து அணிந்துக்கொள்கிறாய் அதையும் மாலையாக்கி
எனக்கு இடுகாட்டானாயும்
நீ மட்டுமே இருக்க வேண்டுமென்ற
தீர்க்கத்தில்.....
பிடிமண் போடும் போது என் பேரை உச்சரிக்காதே
அடுத்த பிறவி எனக்கு உனக்காக வேண்டாம்!!!

Thursday 26 July 2012

செளக்கியங்கள்!!!


செளக்கியம் கேட்பவர்களிடம்
எப்படி சொல்வேன்
மிகச்சொற்பமே கைவசம் என்று
இனி யாரேனும் கேட்பாராயின்
உயிரை கேட்பதாய் உத்தேசித்துள்ளேன்
அசெளக்கியங்களை அறிவதே
ஒரு செளக்கியத்தின் உத்தேசம்
இழப்புகளின் பலனாய் பாடம் இது
எப்படி பார்த்தாலும் அவர்களை விட
நான் பரவாயில்லை தான்
என்னிடம் செளக்கியம் கேட்டு
தங்கள் அசெளகரியத்தை எனக்கு
விட்டுச்செல்ல உத்தேசித்துள்ள
உத்தேசம் எனக்கும் வெகு சமீபத்தில் தான் உரைத்தது
சமீபமாய் உன் அசெளக்கத்தை என்னிடம் காட்டிய நீ தான்
அனேகமாய் இந்த கவிதைக்கும் கதாநாயகன்!!!

Wednesday 25 July 2012

காதல் பிரம்மாக்கள்




அந்த பெருவிழியில் வீற்றிருக்கிறது
என் பிம்பம்
ஓய்யாரமாய்,ஆங்காரமாய் மிக அலட்சியமாயும்
என் பார்வையின் கரிசனத்தில் தான்
அவன் கடந்து கொண்டிருக்கிறான் பாதைகளை
நான் சேகரித்தும் நிராகரித்தும் கொண்டிருக்கிறேன்
அவன் பார்வைக்கான ஊடுறுவல்களை
அதை அப்படியே ஆமோதிக்க அவனும்
பழகிக்கொண்டிருக்கிறான்
இருவரின் பார்வைக்கும் பிடித்தவைகளை மட்டும்
நானும் அவனும் கவிதைகளாக்குவோம்
அனேக நேரங்களில் அவன் பார்வை
இழந்தவனாக இருக்கவே ப்ரியப்படுகிறான்
அவ்வேளைகளை நாங்கள் இரவுகளாக்கிக்கொள்கிறோம்
கனவுகளுக்கு இங்கு இடமில்லை
நாங்கள் சிற்பிகள், ஓவியர்கள், கவிஞர்கள், கதைச்சொல்லிகள்
எங்களுக்கானவைகளை தோற்றுவித்துக்கொண்டு
நாங்கள் கடவுள் ஆனோம்!!!

Tuesday 24 July 2012

காலம்!!!

உன்னை
பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று சொல்ல
எதையோ கேட்டவே நினைக்கிறது மனம்
உன் கண்ணீர் கண்டதும் என்னை அணைத்தப்படி
நீங்கிவிடுகிறேன் நீயும் வழிந்த கண்ணீரை துடைக்க
மறந்த படி சென்றுக்கொண்டிருக்கிறாய்
இருப்பினும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நீ கண்ணீருடனும் நான் வெறுங்கையுடனும்
ஒரு நாள் சந்திப்போம் என்று
அன்று அலவளாவிக்கொள்வோம்
நான் தந்து சென்றது நீ கொண்டு சென்றது பற்றியெல்லாம்
அதுவரை நீ சிந்தியபடி இரு கண்ணீரை
நான் எப்படி கேட்பது என்று
கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என்னை
அதுவரை வேறு ஒலங்கள் கேட்காதிருக்கட்டும் நமக்கு!!!

Monday 23 July 2012

அவள் அப்படித்தான்!!!

கொஞ்சம்
மெறுகேற முனைகிறேன்
வேறு வழியே இல்லை
உன்னை இறக்கி வைப்பதை தவிர
என் பேனாவின் முனை
மழுங்க செய்தததை விட
வேறொன்றும் தரவில்லை நீ பதிலுக்கு
ஒரு ஈரப்புன்னகைக்கும்
காயந்திருந்தது உன் இரக்கமற்ற இதழ்கள்
ஒரு
ரோஜாவை கூட ரசிக்கும் மன நிலை காணவில்லை உன்னிடம்
பேருந்தை தவற விடக்கூடாதென்பதிலேயே உன் கவனமெல்லாம்
உன்னை பேருந்து ஏற்றி விட்டு கை அசைத்து விடைபெறுகையில்
உள்ளங்கையில் ஈரக்கசிவு
அனேகமாய் அது உன் மேல் தெரித்திருக்க வாய்ப்பில்லை
தாலாட்டி உறங்கப்பண்ணித்தான் ஓய்வெடுக்கப்போகிறேன் உன்னில் இருந்து
நீ எழுந்தாலும் என்னை அழைக்காதே
உன் தேவைகள் அனைத்தும் உன் கை எட்டிய தூரத்தில்
அடுக்கி வைத்திருக்கிறேன் இனி உன்னை நீயே பராமரித்துக்கொள்
இது என்ன என்று கேட்பவர்களுக்கும் என்னிடம்
பதில் ஏதும் இல்லை கடந்து போய்க்கொண்டிருங்கள்
அவள் அப்படித்தான்!!!!

Wednesday 18 July 2012

மனசு

எல்லாம் ஏதுவாய் இருக்கிறது
புன்னகைத்துக்கொண்டே இருக்க..
ஒரு அறிமுகம்
சாலைகடத்தல்
சேலை தேர்வு,
விட்டுக்கொடுத்தல்
சின்ன சின்ன சண்டை,
நெட்டி முறித்தல்
முத்தமிடுதல்,
காதல் சொல்வது
மெளனப்போராட்டம்
ஊடுறுவல்,
இதயம் துளைத்தல்
கண்ணாமூச்சி
சமையல்
அடுத்த வீட்டு ஜன்னல்
கொஞ்சம் பொறாமை
புதுசா தைத்த சுடிதார்
கவிதை எழுதுதல்
நண்பர்களோடு அரட்டை
புறம் பேசுவது
இப்படி
இன்னும் இன்னும்
எல்லாம் ஏதுவாய் இருக்கிறது
புன்னகைத்துக்கொண்டே இருக்க
இருப்பினும்
எதற்கோ புழுங்கிக்கொண்டிருக்கிறது
”மனசு”

Tuesday 17 July 2012

அவன் வந்த பொழுதுகள்..

இப்படியான
ஒரு பொழுதில் தான்
எங்கள் அறிமுகம்
உத்தரவோட உள்ளே வந்தான்!!

அவசர வேலை நிமித்தம்
அங்கிங்கென்று அலைந்துகொண்டிருந்தான்
கூடவே
என்னை அழைத்து வரவேண்டும்
என்ற
கட்டாயமும் அவனுக்கு இருந்தது !!

அப்படியான
ஒரு பொழுதில் தான்
எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது!!

அழுக்காய் இருந்தான்
அது அலைச்சலின் நிமித்தமாய் இருக்கலாம்
அழுக்கான பசங்களை பெண்களுக்கு பிடிக்குமாம்
நேற்று குளிக்காத நண்பன் சொன்னான்..

அப்போது
என் கண்களுக்கு அழகாய் இருந்ததன்
காரணம் புரிந்தது!!

விடைபெறும் போது
விழியிடம் ஏதோ கேட்டு
எதையோ தேடி விழியால் ஏதோ சொன்னான்
அப்போதேதும் விளங்கவில்லை!!

வீடு வந்தேன்
விடைகிடைத்தது

எப்படியோ
ஆன ஒரு பொழுதில்
அபகரித்திருந்தான்
“ அவன் “
என்னை!!!

Wednesday 4 July 2012

வா இலக்கியமாகலாம்..

உன்னை
நிந்தித்தும்
என்னை நொந்துக்கொண்டும்
கால விரயமே...
இருப்பினும்
பசிக்க தவறவில்லை
வேஷம் இடுவதும் நின்றுவிடவில்லை
ஏதோ
ஒன்றுக்காக ஏதோ ஒன்றில்
செயல்பட்டாக வேண்டிய
கட்டாயத்தில்
நீ
நான்
அவர்கள்
இவர்கள்
அவை
இவை
கடந்து கொண்டிருக்கிறது
பொழுதுகள்
இப்போதெல்லாம்
எதற்கும் கலங்குவதில்லை விழிகள்
புத்தகமாக
எல்லா கட்டுகளும் பொருந்தியபடியால்
ஒரு
இலக்கியத்திற்கு நாயகியாய்
எல்லா தகுதிகளோடும்
நான்
ஏன்
நீ கூட என்னை
காவியமாக்கலாம்
உனக்கும் அதற்கு
எல்லா திறமைகளும் உண்டு
நேற்றைய
உண்மை இன்றைய சரித்தரம்
நீயும் நானும்
நாளைய இலக்கியமாய் மாறலாம்
உன்னால்
இயலாது என்றால் சொல்
வேறு
எவரையேனும்
நம்மை
எழுத சொல்லலாம்