Wednesday 13 June 2012

நீ...10

தந்துச்சென்ற
நீயும்
வாங்கி வந்த
நானும்
இப்படியே
இருந்துவிடுவோம்

ஆனால்
துரத்தி வரும் நினைவு
தூபம் போடும் ஆசை
ஆபுத்திரனின் அட்ஷய பாத்திரமாய்
அன்றாடம் சுரக்கும்
ப்ரியத்தை தானமாய் தர
நான் மணிமேகலை
தெய்வமில்லை..

வா
வந்து வாங்கிப்போ
திரும்ப
நீ
எதுவும் தரவேண்டாம்

உன்னால்
உனகாக பிறக்கும்
என்
ப்ரியங்களின் தகப்பன்சாமி
நீ
தான்

இழிவு காலமா?

அன்றொருவன்
காதலிக்க
அடுத்தொருவனை
மணமுடித்தனர்
இன்று
நானொருவனை காதலிக்க
ஈரமில்லாத பூமி
சொல்கிறது
இதென்ன இழிவு காலமென...

நான் யாரென்று
எனக்கே புரியாமல் போக
என்
எழுத்துக்களை
ஆணாக்கி அன்றாடம்
என்னை நானே
மானபங்கப்படுத்திக்கொள்கிறேன்...

எந்த புலவன் இனி
வரப்போகிறான்
என்னை
காவியமாய் படைக்க?

Tuesday 12 June 2012

நீ....9

இன்னும்
நிலா காட்டி சோறுட்ட
அடம்பிடிக்கிறாய்

ஒன்றிரண்டு பருக்கைகள்
மேவாயில் ஓட்டிக்கொள்ள
எனக்கும் பசிக்க
ஆரம்பிக்க

போதுமானதாய் இருக்கிறது
அவ்விரு
பருக்கைகள்...

Monday 11 June 2012

கோலம்.

நேர்த்தியாய்
திருத்திய புள்ளி நீ
சாரலுக்கே அழிந்துவிட்டாய்
நியதி தான்
எதுவும் விதிவிலக்கல்ல
என் பேராசைக்கு முன்..

இனி
கோலமிடும் எண்ணமில்லை
என் வாசல்
அம்மணமாகவே இருக்கட்டும்
இனியொரு
வண்ண கோலம்
வேண்டாம்
வாழ்க்கைக்கும்...

நீ.....8

இன்னும் குழந்தையாய்
நீ...
இன்னும் குழந்தை தான்
நீ
குழந்தை
நீ
மழலை
நீ....

கருவில்
நீ
என்
திருவிலும்
நீ
நீ
நீ
நீ
நீதாண்டா....
.....................ஏன்
இன்னும்
குழந்தையாய்
நீ?

நீ.....7

ஏதோ
ஒன்றை சொல்ல
ஏதோ ஒன்றை
கேட்க
ஏதோ ஒன்றை
நினைக்க
ஏதோ ஒன்றை
மறக்க
ஏதோ ஒன்றில்
தவிக்க
ஏதோ ஒன்றை
இயக்க
ஏதோ ஒன்றை
பாட
ஏதோ ஒன்றை
இழக்க
ஏதோ ஒன்றை
எழுத
கொஞ்சம் நேரம்
என்னை திரும்பக் கொடு
அந்த
ஏதோ ஒன்றில்
சற்று நேரம் ஒன்ற...

தேடல்

என்
ஏமாற்றத்தை
இயலாமையை
தவிப்பை
ஏக்கத்தை
நிர்வாணமாக்கி
குத்தி கீறி இரணமாக்கி
காண்கையில்
கொக்கரிக்கிறது
சிதறிய ரத்ததுளிகளும் மாமிச துண்டுகளும்
இப்போதும்
உனக்கு ஒன்றும் கிடைத்திருக்காதே என்று..

-----------------------

பகுதி
வாரியாய் பிரிக்க
எத்தனிக்கையில்
நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு
பிரிவுகள்
எதை பிரித்து எதை எதால் வகுத்து
இயலுமா எல்லாம்
தளர்ந்து விட்டேன்
இருந்து போகட்டும்
இந்த இயலாமையை
இறுமாப்பாய் காட்டிக்கொண்டு
நடையை கட்டுகிறேன் நான்
எதையும் கண்டுக்கொள்ளாமல்
ஜனநாயகம்.

----------------

வேடிக்கை

அவள்
கண்களில் அந்த காயம்
ஆறாமல் சீழ் வடிய

அவன்
கண்களில் மேலும் ஒரு மொட்டு
அரும்ப துடிக்கும் தயார் நிலையில்

அவர்கள்
கண்களில் இன்னும் சற்று அதிக பிரகாசம்
நிமிர்ந்து உட்கார்ந்து உட்கார்ந்து
இடை வலித்த பின்னும்
சுவாரஸ்யத்தின் முனைப்பில்

இப்படியாக
காலங்கள் கடக்க
நேற்று அன்றாகி
இன்று நேற்றாகி
நாளைக்காக காத்திருக்கு
அரசியல்
ஆன்மீகம்
சமூகம்
காதல்
விலைவாசி
தோல்வி
வெற்றி
கல்வி
கடன்
ஜெனம்
மரணம்
பாவ புண்ணியம்
குழந்தை சிரிப்பு
நோயின் வலி
தீவிரம் அடக்கா பசியோடு
நா........

நீ.....6

தட்டு தடுமாறி
நீ
தவறி விழுவதை
பார்க்கும் போதெல்லாம்
வருத்தமாய் தான் உணர்கிறேன்
உன்
பார்வை பறித்த
குற்றவாளியாய்..
ஆனாலும் உனக்கும் ஓர் வாய்ப்பு
கொடுத்தேன்
மரணிக்கச்சொல்லி.

--------------

அன்னைக்கு ஒரு நாள்
அடுத்தொரு நாள்
பிறகொரு நாள்
முந்தின நாளுக்கு முன் நாள்
முந்தின நாள்
நேற்று
இன்று
அன்றாடம் நீ அனுப்பும்
அத்தனை புகைப்படத்திலும்
நீ மெருகேறி தான் இருக்கிறாய்
நான் தான் இன்னும்
நீயாகாமல்

“ தீ “ யாகி

---------------

எப்படியாவது
இன்றேனும் என் கவிதையில்
உன்னை நிறுத்த
எண்ணிக்கொண்டிருக்கையில்
எளிமையாய் எப்போதோ
என்னை
கடந்து சென்றுவிட்டிருக்கிறாய் நீ
எப்படி
இதில் யாருக்கு யார்
வேண்டாம்?

----------------

Sunday 10 June 2012

இப்படிக்கு காதல்....................

நிறைய
சொல்லனும்
என்ன சொல்லனும்?
ஏதேதோ சொல்லனும்
என்னன்னு சொல்லனும்?
எல்லாம் சொல்லனும்
என்னென்ன சொல்லனும்?

எப்படி சொல்ல?
எப்படியாவது சொல்
எதை மட்டும் சொல்ல?
எல்லாவற்றையும் சொல்
சொன்னால் என்ன செய்வாய்?
கேட்டால் ஏதாவது செய்வேன்

கேட்டு என்ன செய்வாய்?
கேட்காமல் ஏதும் செய்வேன்
கொடுத்ததை என்ன செய்ய?
கொடுக்காமல் வைத்திரு
ஏதேனும் புரிகிறதா?
எல்லாம் புரிகிறது

பிறகேன் இப்படி
உனக்கு பிறக்கத்தான் அப்படி...

இப்படிக்கு
காதல்....................

நீ.....5

இன்று
ஞாயிற்றுகிழமை இன்னும்
அவன் எழுந்திருக்கவில்லை
சற்றே அதிகம் களைந்திருந்தான்
புறமுதுகு காட்டி உறங்கிகொண்டிருந்தான்
சத்தியமாய்
இதற்கெல்லாம் காரணம் நானில்லை
அருகிருந்து பார்க்கிறேன்
குளிக்காமல்
அழுக்காய் இருந்தாலும்
அழகாய் தான் இருக்கிறான்
உறக்கத்திலும்......

கலியுகம்

மாசறு
பொன்னாய் வாழ்ந்ததெல்லாம்
பொற்காலம்
கற்றல் கேட்டல் அறிதல்
இப்படி
அனைந்தும் அறிந்ததன் பயனாய்
நிம்மதி தொலைந்து
மாசுறு பெண்ணானேன்..
இம்மை
மறுமைக்கெல்லாம் அஞ்சியது அக்காலம்
எப்பாடுபட்டு கெட்டதெல்லாம் எதற்காக
நான் நடக்கும் பொருட்டு
சிந்தும் ஆணவத்துளிகளால்
பிறர் ஆசிர்வதிக்கப்படுவார்களே அதற்காக!!!

நீ .....4

எந்த
சந்தோஷங்களையும் கொண்டு
சமன் செய்ய முடியவில்லை
நம் ப்ரியங்கள்
வாழும் இடத்தில்..
நம்
நேற்றைய பொழுதை இன்னும்
கொண்டாடிக்கொண்டு 
நான்
புறையோடி நீர் அருந்த
மறந்து நீ.....


---------------------


அச்சம் தவிர்
என
நீ அறிவுறுத்துகையில்
அறிந்திருக்கவில்லை
நான்
நீ
உன்னை 
தவிர்க்க சொல்லி இருக்கிறாய் என்று.


---------------


விடைபெறுகையில்
நெற்றி
கண்
கன்னம்
இதழ் என
நீ
தந்த முத்தங்களை விட
இனிக்கவில்லை 
கலவி...


---------------



நீ.......3

வழியெங்கும்
நீ விதைத்து சென்ற
பார்வை
விளைந்து கிடக்கிறது
காதலாய்..


-----------


ஈரமற்ற
பார்வையில் என்ன விதைக்க?
தரிசாகவே கிடக்கட்டும்
காதலின்றி..


----------------


உள்ளங்கைகளில்
உன் முகத்தை ஏந்தி
நான் ரசிக்கையில்
நீ 
சிந்திய சில புன்னகைகள்
காதலா?
காணிக்கையா?


------------


உயிர்த்தும்
நீத்தும்
கண்ணீர்
வாசம் மாறாமல்
நீ வாசிக்க
மூடி வைத்த புத்தகம்...


----------------


அந்த
நானிலத்தில்
அவன்
பாலைவனம்
என் இதயத்தின் ஈரம் கூட 
அவனிடம்
வறண்டு விடுகிறது.


--------------


நீ
உறங்கிய பின்
என்னால் எழவே முடிவதில்லை
எழுத்தாய் கூட..


----------

முத்தம்

அந்த
ஜீவாலையில்
பொசுங்காத ஓர் முத்தத்தை
இன்னும் 
பொத்தி வைத்திருக்கிறேன்
அடுத்த முறை
தீ மூட்ட!!!


----------------


ஒற்றை 
முத்தம் தான் என் முதலீடு
இன்று 
நான்
அவன் முத்தங்களின் மகா ராணி.


---------------


என்
முத்த 
நெரிச்சலில்
உன்னை காப்பாற்ற
மனமில்லை
இம்முறை
மூச்சு முட்டி இறந்து விடு!!


------------------


ஒளிந்து 
கொள்கிறான் நான்
தேடி வந்து முத்தமிட வேண்டுமாம்
பூச்சாண்டி வருகிறான்
கொடுத்திடுவேன் என்பேன்
முன் வந்து நின்றிடுவான்
ஒளிந்திருந்த கள்வன்.


---------------


மழையில்
அவன் என்னை
முத்தமிடுவதை நான் அனுமதிப்பதில்லை
பின் வரும் நாளில் அது
முத்த பூமியாகிவிடும்!


----------------

நீ - 2

எத்தனை
குறுக்கு வழியும் பாயும்
ஒரு ஊடல்.
அத்தனை
சமாதானங்களையும்
தேடும்
பின் கூடலுக்காய்.


---------------


சின்ன
சின்ன அத்துமீறல்கள்
அடம் பிடித்து
ஓடும் குழந்தையின்
கால் தடங்களாய்..
கடிந்தவாறு
சிணுங்கலும் சிணுங்கியவாறு
இணக்கமும்
இரவு நேரத்து
இணக்கத்தின் குறியீடுகள்.


---------------


தூக்கம்
துறந்த இரவுகளில்
விழியில் வெளிச்சம் போட்டு கனவுகள்
நீர்க்குமிழி 
கனவுகள் உடையும் போது
கசியும் நீரை
கண்ணீர் என்கின்றனர்
என்னில்
உன்னை காணதவர்கள்.


------------------


எந்த
கவிதையும்
என்னுடையது அல்ல
அவை
நீ
தீண்டிய போது
உதிர்ந்த
முத்தங்கள்.


-------------


அது
உன் பெயராகத்தான்
இருக்கக்கூடும்
அதனால் தான்
நான் 
இத்தனை முறை எழுதுகிறேன்.


------

நீ,,,1

நீ
என்ற நீ 
நீயாகவே
எனக்கு 
நீ 
காதலுமில்லை
கவிதையுமில்லை
கோவிலுமில்லை
கடவுளுமில்லை
அத்தை மகனோ
மாமன் மகனோ
இல்லவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
யாரோவாகவே
நண்பனுமில்லை
பகைவனுமில்லை
கட்டியவனா
அய்யோ அறவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
நீ
உறவுமில்லை
உயிருமில்லை
இதயமும் இல்லை
காயமோ தழும்போ
இல்லவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
நீ என்ற
நீ
வானமோ மழையோ இல்லை
நிலமோ பயிரோ இல்லை
சிரிப்போ அழகோ
இல்லவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
தூக்கமும் இல்லை
துக்கமும் இல்லை
எதுவுமாய் இல்லை
ஏதுமாயுமில்லை
அனைத்தும் நீயே
என்பதோ அறவே இல்லை
நீ
என்ற நீ
எனக்கு
நீயாகவே
யாரென்று உன்னை
நான் கேட்கவேயில்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
நான் என்ற நானும்
நீயாகவே!!!